ஜார்கண்ட் மாநிலம் பொக்காரோ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் சோனு தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தம்பதியின் கணவர் விகாஸ் ரஜ்வார், தமிழ்நாட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஊருக்கு வந்தது முதலே, தனது தாய் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என சோனு தேவி தொடர்ந்து கணவரிடம் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் நீடித்து வந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று இரவும், “நான் அம்மா வீட்டுக்கு போக வேண்டும்” என சோனு தேவி பிடிவாதம் பிடித்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடும் சண்டை வெடித்துள்ளது.
பின்னர் அனைவரும் உறங்கச் சென்ற நிலையில், அதிகாலை வேளையில் சோனு தேவி தனது 13 மாத கைக்குழந்தையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
அப்போது ஆத்திரம் அடங்காத விகாஸ், வீட்டில் இருந்த கோடரியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சோனு தேவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.
இந்தச் செயலைச் செய்த பிறகு, விகாஸ் தானாகவே தனது தந்தையிடம் விபரத்தைக் கூறியுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் விகாஸை கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கோடரியைப் பறிமுதல் செய்தனர்.
ஒரு சிறிய தகராறு காரணமாக 13 மாதக் குழந்தை தாயை இழந்து நிற்கும் சோகம் அந்த கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
