ஆதார் கார்டு என்பது வங்கி கணக்கு முதல் பள்ளி சேர்க்கை வரை அனைத்து முக்கிய தேவைகளுக்கும் அவசியமான ஆவணமாக உள்ளது. இதில் பெயர் அல்லது முகவரி போன்ற விவரங்கள் துல்லியமாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதி தவறாக இருந்தால், அதனைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், அரசு சலுகைகளைப் பெறுவதிலும் மற்ற அதிகாரப்பூர்வ பணிகளிலும் தேவையற்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
ஆதாரில் பிறந்த தேதியைத் திருத்தம் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்த பட்டியலை UIDAI வெளியிட்டுள்ளது. அதன்படி, பிறப்புச் சான்றிதழ், இந்திய பாஸ்போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் வழங்கிய மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ், ஓய்வூதியர் புகைப்பட அடையாள அட்டை அல்லது சேவை புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து உங்கள் விவரங்களை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த மாற்றங்களை அருகில் உள்ள ஆதார் மையங்களிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விரைவாகச் செய்து முடிப்பது நல்லது.
