டெல்லியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய இரண்டு இளைஞர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதான அபவ் மற்றும் அவரது உறவினர் யக்யா (20) ஆகிய இருவரும், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை நேரில் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அபவ்வின் தந்தை சுமித் தனது மகனுக்கு போன் செய்து, பாதுகாப்பிற்காக வீடு சேரும் வரை போனை துண்டிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மைதானத்தில் தான் பார்த்த சுவாரசியமான விஷயங்களை தனது தந்தையிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டிருந்த அபவ், “அப்பா, இன்னும் அரை மணி நேரத்தில் வீடு வந்துவிடுவோம்” என்று கடைசியாகப் பேசியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் திடீரென ஒரு பலத்த சத்தமும், அதைத் தொடர்ந்து நிசப்தமும் நிலவியது. பதறிப்போன தந்தை அபவ்வின் பெயரைச் சொல்லிக் கூச்சலிட்டும் பதில் வரவில்லை.
சிறிது நேரம் கழித்து யாரோ ஒரு வழிப்போக்கர் போனை எடுத்து, அவர்கள் விபத்தில் சிக்கிய தகவலைத் தெரிவித்துள்ளார். டெல்லியின் அசோகா சாலையில் அதிவேகமாக வந்த ஒரு லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டது.
லாரியின் சக்கரத்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னும் மூன்று நாட்களில் அபவ் தனது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில், இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த யக்யா, இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
தற்போது விபத்தை ஏற்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள டிரைவரைத் தேடி வருகின்றனர்.
