நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவ்வபோது ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொணவகரை செல்லும் சாலையில் சிறுத்தை இரவு நேரத்தில் உலா வந்தது.

இதனையடுத்து அந்த வழியாக ஒரு வாகனம் வந்ததால் சிறுத்தை சாலையிலேயே நீண்ட தூரம் ஓடி மறைந்தது. இதற்கிடையே அந்த வாகனத்தில் வந்த ஒருவர் செல்போனில் சிறுத்தை ஓடும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. கொணவகரை சாலையில் பயணிக்கும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.