கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில், பெண்கள் கழிவறையில் ரகசியமாக செல்போன் வைத்து வீடியோ பதிவு செய்த ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதாவது ஸ்ரீரங்கப்பட்டணா கஞ்சம் சாலையில் உள்ள ‘சரவணா ஹோட்டல்’ என்ற தனியார் உணவகத்திற்குப் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார். அவர் அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தச் சென்றபோது, சுவரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்த அவர், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அந்த செல்போனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த ஹோட்டலில் சப்ளையராகப் பணிபுரியும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெண் வாடிக்கையாளர்கள் கழிவறையைப் பயன்படுத்தும் போது, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடிக்க ஹரீஷ் தனது செல்போனைப் பயன்படுத்தியது உறுதியானது. போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் தினமும் இதுபோன்று வீடியோ பதிவு செய்ததை ஹரீஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஹரீஷைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நெடுஞ்சாலை ஓரம் உள்ள உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
