உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை துணை ஆய்வாளர் (SI) ஆட்சேர்ப்புத் தேர்வில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிக்கும் வகையில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய வினா, ஆளும் பாஜக தரப்பிலேயே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமை (மார்ச் 14) காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் பொது அறிவுப் பகுதியில், “சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொள்பவர்களை ஒரு வார்த்தையில் எவ்வாறு அழைப்பீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலாக: பண்டிட், சந்தர்ப்பவாதி, நேர்மையானவர், நல்லொழுக்கமுள்ளவர் ஆகிய நான்கு விருப்பங்கள் (Options) வழங்கப்பட்டிருந்தன. இதில் ‘பண்டிட்’ என்ற வார்த்தையைச் சந்தர்ப்பவாதி என்பதற்கு இணையாகச் சேர்த்திருப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாகப் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள மாநிலத் துணை முதல்வர் பிரஜேஷ் பதக், “எந்தவொரு சமூகத்தின் கண்ணியத்தையும் புண்படுத்தும் இத்தகைய கேள்விகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ-க்கள் ரமேஷ் சந்திர மிஸ்ரா, ஷலப் மணி திரிபாதி மற்றும் கட்சியின் மாநிலச் செயலாளர் அபிஜத் மிஸ்ரா ஆகியோர், இது மாநில அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கச் செய்யப்பட்ட சதி என்று குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர்கள் அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
அகில இந்திய இந்து மகாசபா இந்த விவகாரத்தில் வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது. “பண்டிட் என்பது அறிவு மற்றும் மரியாதைக்குரிய சொல். அதைச் சந்தர்ப்பவாதத்துடன் ஒப்பிடுவது ஒரு சமூகத்தின் மீதான வெறுப்பையே காட்டுகிறது,” என அதன் செய்தித் தொடர்பாளர் ஷிஷிர் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
சர்ச்சை முற்றியதைத் தொடர்ந்து, அந்த வினாத்தாளைத் தயாரித்த குழுவின் மீது துறை ரீதியான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த சர்ச்சைக்குரிய கேள்வி உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், வினாத்தாள் தயாரிப்பில் இனி வரும் காலங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சாதிப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் இந்த வினா வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
