தமிழக சட்டசபை தேர்தல் களம் தற்பொழுது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்வதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கூர்நோக்கர்களிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து விவரங்கள் மற்றும் பின்னணி குறித்த தகவல்களைத் திரட்ட லட்சக்கணக்கானோர் இணையதளத்தில் குவிந்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affidavit.eci.gov.in/ பக்கத்தில் அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களும் பொதுமக்களின் பார்வைக்காகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் வேட்பாளர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், கல்வித் தகுதி மற்றும் கடன் விவரங்கள், போன்றவற்றை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளும் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் முதன்முறையாக களம் காணும் த.வெ.க. தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது பிரமாண பத்திரத்தை மட்டும் இதுவரையில் சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரு வேட்பாளரின் விவரங்களை அறிய இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேர் ஆர்வம் காட்டியிருப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
விஜய்க்கு அடுத்தபடியாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து வாசித்துள்ளனர். முக்கியத் தலைவர்களின் சொத்து மதிப்பு கடந்த தேர்தலை விட எந்தளவு உயர்ந்துள்ளது அல்லது மாறியுள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவே மக்கள் இந்த ஆர்வம் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்காளர்கள் தங்கள் வேட்பாளரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தரவுகள் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
