பிரேசிலின் எமிலியானோபோலிஸ் பகுதியில் 88 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கிற்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மீண்டும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜூராசி ரோசா அல்வேஸ் என்ற முதியவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிட்டு, அவர் உயிரிழந்துவிட்டதாகச் சான்றிதழ் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக சவக்கிடங்கிற்கு மாற்றப்பட்டது. அங்கு பணியாளர்கள் அவரது உடலை இறுதி சடங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தபோது, திடீரென முதியவரின் வயிறு அசையத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகப் பரிசோதித்ததில் அவர் சுவாசிப்பதும், இதயம் துடிப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனால் சவக்கிடங்கு பணியாளர்களின் விரைவான செயல்பாட்டால், அவர் மீட்கப்பட்டு மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து தற்போது சட்டப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவ உலகின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்த அதிசயம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.