மும்பையில் வாடிக்கையாளர் ஒருவரிடம் கட்டாயமாக ‘சர்வீஸ் சார்ஜ்’ (சேவைக் கட்டணம்) வசூலித்த பிரபல உணவக நிர்வாகத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 50,000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மும்பையைச் சேர்ந்த ‘சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘போரா போரா’ உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளரின் பில்லில், உணவின் விலையுடன் சேர்த்து 10 சதவீதம் சேவைக்கட்டணம் கூடுதலாக விதிக்கப்பட்டது.
மேலும் உணவகங்களில் இக்கட்டணத்தை கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என்று நீதிமன்றங்கள் பலமுறை எச்சரித்த போதிலும், அந்த உணவகம் கட்டணத்தை நீக்க மறுத்ததால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய ஆணையம், உணவகத்தின் பில் ஆதாரங்களை ஆய்வு செய்ததில் வாடிக்கையாளரின் குற்றச்சாட்டு உண்மை என உறுதி செய்யப்பட்டது. உணவகங்கள் சேவைக்கட்டணத்தை விருப்பத்தின் அடிப்படையிலேயே பெற வேண்டும் என்றும், அதனை வலுக்கட்டாயமாக வாடிக்கையாளர்களிடம் திணிக்கக்கூடாது .
என்றும் மத்திய அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், உணவகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நுகர்வோர் தைரியமாக புகார் அளிக்கலாம் என்பதையும், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
