பனிபடர்ந்த மலைச்சிகரத்தில் பிளாஸ்டிக் கொள்கலனுக்குள் தலை சிக்கித் தவித்த குட்டி நரி ஒன்றை, மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
பனி மூடிய மலைப்பகுதியில் இரண்டு மலையேற்ற வீரர்கள் (Trekkers) மலையேறிக் கொண்டிருந்தபோது, அங்கு சிறிய நரி ஒன்று உதவியற்ற நிலையில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அந்த நரியின் தலை ஒரு பிளாஸ்டிக் டப்பாவிற்குள் முழுவதுமாகச் சிக்கியிருந்தது. மேலும், அதன் உடலில் பிளாஸ்டிக் உறைகள் சுற்றப்பட்டிருந்தன. அங்கிருந்த உணவைத் தேட முற்பட்டபோது, மனிதர்கள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளில் நரியின் தலை சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.
மூச்சு விடக்கூட சிரமப்பட்டு, தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடி சோர்வடைந்திருந்த அந்த நரியைக் கண்ட மலையேற்ற வீரர்கள், சற்றும் தாமதிக்காமல் மீட்புப் பணியில் இறங்கினர்.
ஒருவர் அந்த நரியை வீடியோ எடுக்க, மற்றொருவர் மிகவும் கவனமாக நரியை அணுகினார். நரி பயந்துவிடாதபடி மெதுவாக அதனைப் பிடித்து, சில நொடிகளில் அதன் தலையிலிருந்து அந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்றினார். பிளாஸ்டிக் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட குட்டி நரி, சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் நன்றியுடன் பனிப்பகுதிக்குள் துள்ளிக்குதித்து ஓடியது.
Tırmanış sırasında, başını plastik kaba sıkıştıran tilkiyi fark eden dağcılar, hayvanın hayatını böyle kurtardı.
📍İran pic.twitter.com/R4vq8Jqu5Y
— Aykırı (@aykiricomtr) December 30, 2024
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது” எனப் பலரும் அந்த வீரர்களைப் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், அடர்ந்த மலைப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மலிந்து கிடப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் “நாம் கவனக்குறைவாக வீசிச் செல்லும் ஒரு சிறிய பிளாஸ்டிக் பொருள், வாயில்லாப் பிராணிகளின் உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறக்கூடும். சுற்றுலாத் தலங்களில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமானது,” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
