இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெற்றி கொண்டாட்டத்தின் போது தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி, மகாராஷ்டிராவின் நாலாசோப்பாராவில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றியின் முக்கிய சிற்பிகளில் ஒருவரான ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது தோழி மாஹிகா சர்மா ஆகியோர், வெற்றி கொண்டாட்டத்தின் போது தேசியக் கொடியை அவமதித்ததாக சமூக ஆர்வலரும், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதியுமான குமார் ககடே, நாலாசோப்பாராவின் துளிஞ்ச் காவல் நிலையத்தில் மார்ச் 11-ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.

மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது, ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியைத் தனது உடலில் போர்த்தியிருந்தார். கொண்டாட்டத்தின் வேகம் மற்றும் கவனக்குறைவால், அந்த தேசியக் கொடியின் மாண்பைக் காக்கத் தவறியதோடு, மைதானத்தில் இருந்த மேடையில் கொடியுடன் அமர்ந்தும், படுத்தும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயல் இந்திய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதால், ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம், 1971’-ன் பிரிவு 2-இன் கீழ் ஹர்திக் பாண்டியா மற்றும் மாஹிகா சர்மா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் குமார் ககடே வலியுறுத்தியுள்ளார்.