சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதுமே சர்ச்சைகளுக்கும், விசித்திரமான சம்பவங்களுக்கும் பஞ்சமில்லாத அணியாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. பேட்டிங், பந்துவீச்சில் சொதப்பினாலும், அந்த அணி வீரர்கள் களத்தில் செய்யும் ‘காமெடி’ பீல்டிங் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி செய்த குளறுபடி பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் 114 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியைச் சந்தித்தது.
🚨 TWO JOKER TEAM IN THE WORLD CRICKET 🚨
🇵🇰🇧🇩 Just Bangladesh being Bangladesh and Pakistan being Pakistan 😭🤣 pic.twitter.com/RS25VU5QAs
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) March 12, 2026
இந்தக் குறைந்த இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடியபோது, பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் தரம் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சிரிப்பிலும் ஆழ்த்தியது. ஷாஹீன் ஷா அஃப்ரிடியின் பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடியபோது, இருவரும் ஒரே முனையில் சிக்கிக்கொண்டனர். பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்த பேட்ஸ்மேனை ரன்-அவுட் செய்ய மிக எளிதான வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், பந்தை எறிந்த பீல்டர், ஸ்டம்பை நோக்கி சரியாக வீசவில்லை. பந்தைப் பிடிக்க பந்துவீச்சு முனையில் சரியான நேரத்தில் யாரும் நிற்கவில்லை. பந்து கீழே விழுந்து புரள, பீல்டர்கள் அதைச் சேகரிக்க ஓடி வந்தனர். அதற்குள் பேட்ஸ்மேன்கள் நிதானமாகத் தப்பித்துக்கொள்ள, மைதானத்தில் இருந்தவர்களும், தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களும் பாகிஸ்தான் வீரர்களின் ஒருங்கிணைப்பைக் கண்டு கிண்டல் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்புடன் ஆடவில்லை. சாகிப்சாதா ஃபர்ஹான் (27), ஃபஹீம் அஷ்ரஃப் (37) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 114 ரன்கள் என்ற எளிய இலக்கை, வங்கதேச அணி 15.1 ஓவர்களிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப் பிடித்து வெற்றி வாகை சூடியது. மேலும் பேட்டிங்கில் சரிவு, பீல்டிங்கில் சொதப்பல் எனத் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி சொதப்பி வருவது, அந்த நாட்டு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
