சர்க்கரை நோய் உள்ளவர்கள் மெட்ஃபார்மின் போன்ற மருந்துகளை உட்கொண்டாலும், சில நேரங்களில் மதிய உணவுக்கு முன்போ அல்லது மாலையிலோ சர்க்கரை அளவு குறைந்து (Low Sugar) மயக்கம் அல்லது தலைசுற்றல் ஏற்படுவது பலருக்குப் பெரிய கவலையாக உள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவ நிபுணர்கள், மெட்ஃபார்மின் மாத்திரை பொதுவாக நேரடியாகச் சர்க்கரை அளவை அதீதமாகக் குறைக்காது என்றும், மாறாக உணவுக்கு இடையே உள்ள நீண்ட இடைவெளி மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சி (தினமும் 10,000 படிகள் நடப்பது போன்றவை) காரணமாகவே உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

அதிகப்படியான நடைப்பயிற்சி இன்சுலின் உணர்திறனை அதிகரித்தாலும், போதிய புரதம் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென சரியக் காரணமாகின்றன.

இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க, ஒரே நேரத்தில் அதிக உணவை உண்பதற்குப் பதிலாகச் சிறிய இடைவெளிகளில் அடிக்கடி சத்தான உணவுகளைச் சாப்பிடுவதுடன், நட்ஸ் மற்றும் பழங்கள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.

மேலும், இதுபோன்ற மயக்கம் வரும் நேரங்களில் ரத்தச் சர்க்கரை அளவை முறையாகக் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்த கட்டுப்பாட்டைத் தரும் என அறிவுறுத்தப்படுகிறது.