ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் மோதல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ள நிலையில், அதன் முதல் பலிகடாவாக பாகிஸ்தான் மாறியுள்ளது. அந்நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே அதல பாதாளத்தில் இருக்கும் நிலையில், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி மற்றும் அதிர்ச்சிகரமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குச் சம்பளம் கிடையாது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 25% சம்பளம் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்மட்ட அதிகாரிகளின் இரண்டு நாள் சம்பளம் பொதுமக்களின் நிவாரண நிதிக்காகப் பறிக்கப்பட உள்ளது.

​பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எரிபொருளைச் சேமிக்கப் பள்ளிகளுக்கு இரண்டு வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும், புதிய கார்கள், ஏசி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்கள் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். “நமது நாட்டில் தேவையான எரிபொருள் கையிருப்பு இல்லை” என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப், தானும் தனது அமைச்சர்களும் வெளிநாட்டுப் பயணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். போர் சூழலால் ஒரு நாடு நிலைகுலைந்து, இத்தனை கட்டுப்பாடுகளை விதித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.