துபையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. போட்டி முடிந்த பின்னரும் ஸ்மிருதி மந்தனா தனது செயலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

போட்டி நிறைவடைந்ததும் ஹாங்காங் வீராங்கனைகளிடம் ஸ்மிருதி மந்தனா அன்பாக உரையாடினார். கிரிக்கெட்டில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். இதையடுத்து ஹாங்காங் வீராங்கனைகள் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமுக்கு அழைக்கப்பட்டனர். அங்கு இந்திய அணியின் முன்னணி வீராங்கனைகளுடன் அவர்கள் கலந்துரையாடினர்.

 

பாரதி ஃபுல்மாலி, பிரதிகா ராவல், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா உள்ளிட்ட இந்திய வீராங்கனைகள் ஹாங்காங் வீராங்கனைகளுடன் நீண்ட நேரம் உரையாடினர். சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அனுபவங்கள் குறித்தும், போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார். ஹாங்காங் வீராங்கனைகளின் ஆட்டோகிராப் வேண்டுகோளையும் அவர் அன்புடன் ஏற்று கையெழுத்திட்டு மகிழ்வித்தார்.

இந்திய அணியுடனான ஹாங்காங் மகளிர் அணியின் முதல் போட்டியாக இது அமைந்தது. போட்டியில் தோல்வியடைந்தாலும், இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளுடன் நேரடியாக கலந்துரையாடிய அனுபவம் ஹாங்காங் வீராங்கனைகளுக்கு முக்கியமானதாக அமைந்தது. எதிரணியாக களமிறங்கிய வீராங்கனைகளுக்கு இந்திய அணி வழங்கிய இந்த அன்பும் ஊக்கமும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டிக்கு அப்பாற்பட்டு வீராங்கனைகள் காட்டிய சகோதரத்துவ உணர்வும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.