ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. வாக்கு சீட்டில் பேனாவால் கிறுக்கி தேர்தல் அதிகாரி திருத்தம் செய்தல் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது. சண்டிகர் மேயர் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் 8 பேரின் வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது  சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்தும் விதம் இதுதானா என்று சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். சண்டிகர் மேயர் தேர்தலை நடத்திய அதிகாரி வெளிப்படையாகவே வாக்குச்சீட்டுகளை திருத்தம் செய்துள்ளார். செல்லாத ஓட்டாகவே இருந்தாலும், அதனை திருத்த தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்திருப்பதை பார்த்து மிகவும் வேதனைப்படுகிறோம்.

சண்டிகர் தேர்தலில் வாக்கு சீட்டுகளை சிதைத்துள்ளார் தேர்தல் நடத்தும் அதிகாரி. வாக்கு சீட்டுகளை தேர்தல் அதிகாரி திருத்தி தில்லுமுல்லு செய்தது வெளிப்படையாக தெரிகிறது. தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலை முன்னின்று நடத்தி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் அடுத்த விசாரணை வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தல் அதிகாரியின் முடிவுக்கு ஐகோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.