சேலத்தில் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்த இளைஞர் சூரஜின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லச் சென்ற இடத்தில், தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பிய தவெக மாவட்ட செயலாளரிடம் பேட்டி எடுக்கச் செய்தியாளர்கள் முயன்றனர். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் செய்தியாளர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரத் தோரணையில் காரில் ஏறிச் சென்ற தவெக நிர்வாகிகள், வழிவிடச் சொல்லி அங்கு நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது மோதுவது போலக் காரைச் செலுத்தினர். இதனைச் செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தியபோது, ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் காரிலிருந்து இறங்கி வந்து செய்தியாளர்களின் “சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்தனர்”. “வழியை விடுங்கடா” என்று ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான இந்தத் தாக்குதல் முயற்சி மற்றும் அராஜகப் போக்கு, சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
