அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே நிலவி வந்த போர் பதற்றம் தணிந்து, இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் இதுவரை உச்சத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது 100 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி அமெரிக்க கச்சா எண்ணெய் 14.3% சரிந்து ஒரு பேரல் 96.83 டாலராக விற்பனையாகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 13.3% சரிந்து ஒரு பேரல் 94.74 டாலராக நிலைபெற்றுள்ளது.
ஈரான் தனது ராணுவத்தின் மேற்பார்வையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். போர் நிறுத்தம் மற்றும் எண்ணெய் விலை குறைவு காரணமாக உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் உற்சாகமடைந்துள்ளன.
குறிப்பாக ஆசிய சந்தை ஜப்பானின் நிக்கி (Nikkei) 4.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) 5.6 சதவீதமும் உயர்ந்துள்ளன. அமெரிக்க சந்தை வர்த்தகத் தொடக்கத்திற்கு முன்பே எஸ் அண்ட் பி 500 (S&P 500) மற்றும் டவ் ஜோன்ஸ் (Dow) குறியீடுகள் 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகின்றன.
முன்னதாக, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்களின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தச் சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்புகள் வெளியானாலும், அது எப்போது முதல் அமலுக்கு வரும் என்பதில் இன்னும் தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில், புதன்கிழமை அதிகாலை வேளையில் இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா பகுதிகளில் ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், போர் நிறுத்த ஒப்பந்தம் உலக பொருளாதாரத்திற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
