ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தணிந்து இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், தனது முதல் நன்றியை பாகிஸ்தானுக்கு ஈரான் தெரிவித்தது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் முன்வைத்த அமைதித் திட்டத்தை ஏற்றுக்கொண்ட ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, சரியான நேரத்தில் தலையிட்டு போரைத் தடுத்ததற்காக இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 15 அம்சத் திட்டங்களுக்குப் பதிலாக, ஈரான் வழங்கிய 10 அம்ச வரைவுத் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கச் செய்ததில் பாகிஸ்தானின் ராஜதந்திரம் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகக் கருதப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதால், மத்திய கிழக்கின் அமைதிச் சாவியாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது.
அதேசமயம், இந்தப் போர்ச் சூழலில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தியா ஆரம்பம் முதலே நடுநிலை வகித்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வந்த நிலையில், இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானால் தடையின்றி அனுமதிக்கப்பட்டது ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், ஈரான் மக்களுக்கு இந்திய மக்கள் அனுப்பிய நிதியுதவிக்காக அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஒரு சமாதான மத்தியஸ்தராகப் பாராட்டுப் பெற்றாலும், இந்தியா தனது ஆழமான ராஜதந்திர உறவுகள் மூலம் தனது வணிகம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் எதிரொலிக்கும் என்பதால், இந்தியா இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
