அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிளக்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனம், தனது ஊழியர்களின் வேலைப்பளுவைக் குறைக்க 2017-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த ஒரு சுற்றுலா, எதிர்பாராத விதமாக ஒரு திகில் அனுபவமாக மாறியுள்ளது. சுமார் 120 ஊழியர்களை ஹோண்டுராஸ் நாட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவர்களுக்கு ‘டீம் பில்டிங்’ பயிற்சிகள் என்ற பெயரில் கடும் சித்திரவதைகள் அளிக்கப்பட்டன.

அந்நிறுவனத்தின் சிஇஓ-வே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் மணலில் ஊர்ந்து செல்லவும், பூச்சிகளுக்கு இடையே அவதிப்படவும் நேர்ந்தது.

இந்தச் சுற்றுலாவின் உச்சகட்ட கொடுமையாக, ஒரு போட்டி விளையாட்டின் போது ஊழியர் ஒருவர் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு இறந்த ‘டாரண்டுலா’ வகை விஷச் சிலந்தியைச் சாப்பிட வற்புறுத்தப்பட்டார். வேறு வழியின்றி அந்தச் சிலந்தியைச் சாப்பிட்ட அந்த ஊழியர், அதன் சுவை மிகவும் மோசமாக இருந்ததாகவும், குறிப்பாக சிலந்தியின் முடிகள் அருவருப்பாக இருந்ததாகவும் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

மணல் பூச்சிகளின் கடி, கடுமையான வெப்பம் மற்றும் முறையற்ற தங்குமிடம் என பல இன்னல்களைச் சந்தித்தாலும், இந்த விசித்திரமான மற்றும் கொடுமையான அனுபவம் ஊழியர்களிடையே ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியதாக அவர்கள் இப்போது நினைவுகூர்கின்றனர்.