உத்தர பிரதேச மாநில மீன்வளத்துறை மந்திரி சஞ்சய் நிஷாத் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில், அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உத்தர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இவர் நேற்று கோரக்பூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து ஆக்ரா நோக்கி அரசு காரில் புறப்பட்டார். கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு நாய் சாலையின் குறுக்கே வந்துள்ளது.
நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரின் ஓட்டுநர் திடீரென ஸ்டீயரிங்கைத் திருப்பியுள்ளார். இதனால் காரின் வேகம் குறைந்ததையடுத்து, பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் மந்திரியின் கார் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் பின்பகுதி சேதமடைந்தது. இருப்பினும், காரில் இருந்த மந்திரி சஞ்சய் நிஷாத் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாய் மீது மோதாமல் இருக்க காரைத் திருப்பியபோது நேரிட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
