தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதிமுக-வின் உட்கட்சி மோதல் பேரவையிலேயே வெட்ட வெளிச்சமாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்ததைத் தொடர்ந்து, அதிருப்தி கோஷ்டியாகக் கருதப்படும் எஸ்.பி.வேலுமணியைப் பேச சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அனுமதி அளித்தார். இதற்கு இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கூச்சலிட்டனர்.

இதனால் எழுந்த அமளிக்கு விளக்கம் அளித்த சபாநாயகர், “நீங்கள்தான் எல்லாரும் ஒரே அணி என்று கூறுகிறீர்கள்; அப்படியிருக்கும்போது உங்கள் கட்சியைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினர் பேச விரும்பினால் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டியது எனது கடமை” என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பெயர் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் பேச அனுமதிப்பேன் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியது, இபிஎஸ் தரப்பிற்குப் பலத்த பின்னடைவாகவும், வேலுமணி தரப்பிற்குப் பெரும் உற்சாகமாகவும் பார்க்கப்படுகிறது.