தமிழக வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே ஆளுநர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் பாஜக தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பேசிய பாமக கட்சியின் எம்எல்ஏ சௌமியா அன்புமணி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பாமக விலகி இருக்கும் என்றார். அதோடு அவர் சில கோரிக்கைகளையும் முன் வைத்தார் அதன் படி, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும் கனிமவளங்கள் கொள்ளைகளை தடுக்க வேண்டும் என்றார்.

மேலும் தமிழக முதலமைச்சர் விஜய் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் மெயின் ரோட்டில் ஒரு கடை மூடப்பட்டால் சந்துக்குள் 4-5 மதுக்கடைகள் திறக்கப்படும். இதனை முதலமைச்சர் விஜய் தடுக்க வேண்டும். ஒரு கடையை மூடிவிட்டால் மட்டும் போதாது இதற்கு தொடர் முயற்சிகள் வேண்டும் என்றார். சௌமியா அன்புமணியின் இந்த பேச்சை முதலமைச்சர் விஜய் குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டார். மேலும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் சில முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் குறிப்பு எடுத்து கொள்வது குறிப்பிடத்தக்கது.