ஈரான் உடனான போரில் ஒத்துழைக்க மறுக்கும் நேட்டோ நாடுகளை “கோழைகள்” என விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை அகற்றப்போவதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகரும், செனட்டருமான லிண்ட்சே கிரஹாம் இது குறித்துப் புதிய ஆலோசனையை முன்வைத்துள்ளார். “அவசரக் காலத்திலும், போர்க்காலத்திலும் அமெரிக்காவால் பயன்படுத்த முடியாவிட்டால், மற்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்களை வைத்திருப்பதில் என்ன பயன்? எங்களை அனுமதிக்க மறுக்கும் நாடுகளில் இனி ராணுவத் தளங்கள் இருக்காது,” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஈரான் போரில், தங்கள் நாட்டு மண்ணில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அனுமதி மறுத்துள்ளன. அமெரிக்காவுக்கு உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான ராணுவத் தளங்கள் உள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் மட்டும் சுமார் 80,000 அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ளனர்.

ஈரானைத் தாக்கத் தங்கள் நிலத்தையோ அல்லது வான்வெளியையோ அனுமதித்தால், ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சமே ஐரோப்பிய நாடுகளின் இந்தத் தயக்கத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நேட்டோ நாடுகளின் இந்த நிலைப்பாட்டைத் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். “அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ அமைப்பு வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் ஏந்திய ஈரானைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் பங்கேற்க நேட்டோ நாடுகள் தயங்குகின்றன. ஆனால், போரினால் உயரும் கச்சா எண்ணெய் விலை குறித்து மட்டும் புகார் கூறுகின்றன,” என்று அவர் சாடியுள்ளார்.

மேலும் டிரம்ப் கூறுகையில், “ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து விடுவது ஒரு எளிய ராணுவ நடவடிக்கைதான். இதற்குக்கூட உதவ முன்வராத நேட்டோ நாடுகள் கோழைகள். அவர்களின் இந்தத் துரோகத்தை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்,” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கில் கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் அமெரிக்கா பெரிய தளங்களைக் கொண்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் இந்த விரிசல் சர்வதேச அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.