2008-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல். ஏலத்தின் போது, டெல்லி டேர்டெவில்ஸ் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏன் விராட் கோலியைத் தேர்வு செய்யவில்லை என்பது குறித்த சுவாரசியமான தகவலை அந்த அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்தர் சேவாக் பகிர்ந்துள்ளார்.
அந்தச் சமயத்தில் டெல்லி அணியில் ஏற்கனவே சேவாக், கவுதம் கம்பீர், ஷிகர் தவான், திலகரத்னே தில்ஷன் மற்றும் மனோஜ் திவாரி போன்ற பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் முன்வரிசையில் விளையாடக் காத்திருந்தனர். இதனால் பேட்டிங் வரிசையில் கோலியைச் சேர்ப்பதற்குப் போதிய இடம் இல்லாத சூழல் நிலவியதாக சேவாக் விளக்கியுள்ளார். பேட்டிங் பலமாக இருந்ததால், அணிக்கு வலுசேர்க்க ஒரு பந்துவீச்சாளரே அப்போது தேவையாக இருந்ததாகச் சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே, டெல்லி அணி கோலியைத் தவிர்த்துவிட்டு இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பிரதீப் சாங்வானைத் தேர்வு செய்தது. டெல்லி அணியால் கைவிடப்பட்ட கோலியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. இன்று ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும், அந்தத் தொடரின் ஒரு மாபெரும் ஜாம்பவானாகவும் விராட் கோலி திகழ்வது குறிப்பிடத்தக்கது.
