இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் 2026 தொடரின் மிக முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள தனது சென்னை சூப்பர் கிங்ஸ் பட்டாளத்துடன் ஐதராபாத் வந்தடைந்தார். தோனியுடன் அவரது மனைவி சாட்சி மற்றும் மகள் ஸிவாவும் வந்திருந்தனர்.

தோனி விமான நிலையத்திற்கு வருகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டு “மாஹி.. மாஹி..” என விண்ணதிர முழக்கமிட்டனர். பாதுகாப்புப் படையினர் ஒருபுறம் தோனியைச் சூழ்ந்து அழைத்துச் சென்றாலும், ரசிகர்களின் அன்பு மழையில் இருந்து அவரைப் பிரிக்க முடியவில்லை.

 

ரசிகர்கள் பேருந்து ஜன்னல் வரை ஓடி வந்து தங்களின் அன்புக்குரிய ‘தல’யைக் கையசைத்து வரவேற்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சீசனில் காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, தற்போது ஐதராபாத் வந்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடக்கவுள்ள எஸ்.ஆர்.எச்-க்கு எதிரான போட்டியில் தோனி களம் இறங்குவார் எனப் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர் ஐதராபாத் வந்ததே ரசிகர்களுக்குப் பெரிய தெம்பைக் கொடுத்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வரும் தோனி, மீண்டும் தனது ஹெலிகாப்டர் ஷாட்டுகளால் ஐதராபாத் மைதானத்தை அலறவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.