வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகப் பலரும் வெளிநாடுகளுக்குப் படையெடுக்கும் நிலையில், அங்கிருந்த சொகுசு வாழ்க்கையை ஒரு நொடியில் உதறித் தள்ளிய ஐஐடி (IIT) பட்டதாரி ஒருவரின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ‘ஃபர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியில் டைரக்டராகப் பணியாற்றி வந்த 38 வயது இளைஞர், தனது பல கோடி ரூபாய் சம்பளம், 4 பி.ஹெச்.கே (4BHK) பங்களா என அனைத்தையும் விற்றுவிட்டு, தற்போது தனது குடும்பத்துடன் உலகைச் சுற்றி வருகிறார்.

“பதவி உயர்வு, அலுவலக வேலைகள் என இயந்திரத்தனமாக வாழ்ந்ததில் என்னையே நான் இழந்துவிட்டேன்” என்று கூறும் அவர், இதுவரை 35 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

தனது பயணத்தின் போது சந்தித்த ஆஸ்திரிய சமூகப் பணியாளரையே மணந்து கொண்ட இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்களுக்கு எனச் சொந்தமாக வீடோ, காரோ கிடையாது;

தங்கும் விடுதிகளில் (Homestay) தங்கி எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலேயே வேதம், உபநிடதம் மற்றும் கல்வி கற்று வருகின்றனர். “சொத்து சுகத்தை விட மன அமைதியே முக்கியம்” என இந்த குடும்பம் வாழும் வாழ்க்கை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.