இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பிரண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்ற பிறகு, ‘பேஸ்பால்’ (Bazball) என்ற பெயரில் அதிரடி ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணி, தற்போது ஒழுக்கமின்மை மற்றும் கலாச்சாரச் சீரழிவு புகார்களில் சிக்கித் தவிக்கிறது. சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் 4-1 என படுதோல்வி அடைந்ததற்குக் காரணம், அணியின் பலவீனமான தயாரிப்புகளும், வீரர்களின் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையும்தான் என ‘தி டெலிகிராப்’ அறிக்கை சாடியுள்ளது.

ஆஷஸ் தொடரின் நடுவிலேயே ‘நூசா’ (Noosa) என்ற இடத்தில் வீரர்கள் மது அருந்திவிட்டு போதையில் சுற்றியதும், பயிற்சியாளர் மெக்கல்லமுடன் சேர்ந்து வீரர்கள் ‘வேப்’ (Vape) அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதும் இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​மேலும், நியூசிலாந்து தொடரின் போது இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து கேப்டன் ஹாரி ப்ரூக், நள்ளிரவில் ஒரு கிளப் பவுன்சரால் தாக்கப்பட்ட சம்பவம் அணியின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. அணியின் மோசமான சூழல் குறித்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்ய இங்கிலாந்து வாரியம் ஆலோசித்தது.

ஆனால், அவரது ஒப்பந்தம் இன்னும் 18 மாதங்கள் மீதமுள்ள நிலையில், அவரை நீக்கினால் பெரும் தொகை இழப்பீடாகத் தர வேண்டியிருக்கும் என்பதால், தற்காலிகமாக அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்றதும் இங்கிலாந்து அணியின் பலவீனங்களை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.