ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரசிகர் ஒருவரின் செல்போனைத் தானே எடுத்து செல்பி எடுத்துக்கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்டார். அப்போது மேடைக்கு அருகே திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். அந்தச் சமயத்தில், கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர், சூர்யகுமாருடன் செல்பி எடுக்க வேண்டும் என்ற ஆவலில், தனது செல்போனை அவர் நின்றிருந்த மேடையை நோக்கித் தூக்கி வீசினார்.
திடீரென செல்போன் எறியப்பட்டதால் அங்கிருந்த பாதுகாப்புப் படையினரும், பிற வீரர்களும் சற்றே அதிர்ச்சியடைந்தனர். சூர்யகுமார் யாதவ் அந்த போனைப் பிடிக்க முயன்றார், ஆனால் அது அவர் கையில் சிக்காமல் கீழே விழுந்தது. இதனால் அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
பொதுவாக வீரர்கள் மீது பொருட்களை வீசுவது கண்டிக்கத்தக்கது என்றாலும், சூர்யகுமார் யாதவ் அந்தச் சூழலை மிகவும் பொறுமையுடனும், நகைச்சுவையுடனும் கையாண்டார். கீழே விழுந்த போனை அவரே குனிந்து எடுத்தார்.
A fan threw his phone towards Suryakumar Yadav for selfie, thinking he would catch it, but Surya couldn’t hold on to it.😭❤️ pic.twitter.com/lEneJLqADr
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 21, 2026
பின்னர், அந்த போனைப் பயன்படுத்தி, அந்த ரசிகர் கேட்டபடியே ஒரு அட்டகாசமான செல்பியைத் தானாகவே எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப் படத்தில் பின்னணியில் இருந்த ரசிகர்களும் இடம்பெற்றனர். சூர்யகுமாரின் இந்தச் செயலால் உற்சாகமடைந்த ரசிகர்கள், பலத்த கைதட்டல் மற்றும் ஆரவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. “ரசிகர்களின் அன்பை மதிப்பதில் சூர்யகுமார் யாதவ் எப்போதும் தனி ரகம்” என கிரிக்கெட் ஆர்வலர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். மேலும் ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு உற்சாகமான தொடக்கமாக அமைந்துள்ளது.
