தென்காசியில் அரங்கேறியுள்ள இந்த வினோதமான திருட்டுச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் வரவழைத்துள்ளது. வழக்கமாக ஒரு வீட்டில் திருடினால் அந்தப் பக்கமே தலைகாட்டாத திருடர்களுக்கு மத்தியில், தென்காசியைச் சேர்ந்த இந்தத் திருடன் தான் திருடிய வீட்டிற்கே மறுநாள் மீண்டும் சென்றுள்ளார்.
மேலும் திருடிய பணத்தில் ஒரு பகுதியைச் செலவு செய்துவிட்டு, மீதமிருந்த பணத்தையும் நகைகளையும் அதே வீட்டில் வைத்துவிட்டு, “மனசாட்சி உறுத்தியதால் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்ற ரீதியில் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டுச் சென்றதுதான் ஹைலைட். திருடனின் இந்தத் திடீர் ‘மனமாற்றம்’ குறித்துப் பலரும் வியந்து பேசினாலும், காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருட்டு என்பது சட்டப்படி குற்றம் என்றாலும், திருடிய பொருளைத் திரும்ப ஒப்படைத்த அந்தத் திருடனின் ‘வித்தியாசமான புத்தி’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருடன் எதற்காகத் திரும்ப வந்தார்? நிஜமாகவே மனசாட்சி காரணமா அல்லது போலீஸ் பிடியில் சிக்கிவிடுவோம் என்ற பயமா என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
