வெளிநாடுகளுக்கு வேலைக்காகவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ செல்பவர்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் மருந்துகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாகும். இந்தியாவில் சாதாரண வலி நிவாரணியாகக் கருதப்படும் சில மருந்துகள், துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் போதைப் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இத்தகைய மருந்துகளை வைத்திருப்பது அந்நாட்டின் சட்டப்படி கடுமையான குற்றமாகும். இதன் காரணமாகவே, போதிய விழிப்புணர்வு இன்றி மருந்துகளை எடுத்துச் சென்ற இந்தியர் ஒருவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாடு செல்லும் பயணிகள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றி முன்கூட்டியே அந்தந்த நாட்டுத் தூதரக இணையதளங்களில் சரிபார்ப்பது அவசியம். குறிப்பாக, வலிப்பு, மன அழுத்தம் மற்றும் தீவிர வலி நிவாரணிகளுக்கான மருந்துகளை எடுத்துச் செல்லும்போது, ஒரு வருடத்திற்குள்ளான அசல் மருத்துவச் சீட்டு மற்றும் மருந்தின் விபரங்கள் அடங்கிய கடிதத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் “தெரியாமல் செய்துவிட்டேன்” என்ற வாதம் பல நாடுகளில் செல்லுபடியாகாது என்பதால், தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்ப்பது உங்களைச் சட்டச் சிக்கல்களில் இருந்தும் நீண்ட காலச் சிறை வாசத்திலிருந்தும் காப்பாற்றும்.
