தென்காசி மாவட்டம், புளியங்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், LKG பயின்று வந்த சிறுமி சிவயாழினி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் கல்வி பயிலும் பாதுகாப்பான வளாகத்திற்குள், கார் எப்படி இவ்வளவு வேகமாக உள்ளே வந்தது? இதற்குக் காரணமான ஓட்டுநர் யார்? என்ற கேள்விகள் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுமியின் உயிரிழப்பிற்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பள்ளி வளாகத்திலேயே அமர்ந்து 17 மணிநேரத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கைக் கண்டித்து, பெற்றோர்களும் பொதுமக்களும் நீதிக்காகக் குரல் கொடுத்து வரும் இந்த விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
