சென்னை அண்ணா நகரை சேர்ந்த தம்பதி எட்வின்-பூங்கொடி. இவர்களுக்கு சின்ன ராபர்ட், மோசஸ் உட்பட மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் அந்த பகுதியில் ரவுடிகளாக இருந்துள்ளனர். இதில் சின்ன ராபர்ட் ஏ கேட்டகிரி ரவுடியாக இருக்கிறார். இவருக்கு ஒரு திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டதால் ஒரு வாடகை வீட்டில் அவருடன் தனியாக வசித்து வந்தார். இவர் மீது கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் இருக்கிறது. இவர் நேற்று இரவு தெருவில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வந்துள்ளது. அவர்கள் கண்ணிமைக்கும் நொடியில் ராபர்ட்டை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சின்ன ராபர்டின் நண்பர் கோகுல் என்பவரை ரவுடி லோகு என்பவர் கொலை செய்துள்ளார். அதிலிருந்து லோகு மற்றும் ராபர்ட் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் லோகு கும்பல் முந்திக்கொண்டு முதலில் ராபர்ட்டை போட்டு தள்ளினர். இந்த நிலையில் அந்த கொலை கும்பல் இன்ஸ்டாகிராமில் ராபர்ட்டை கொலை செய்தது குறித்து ரீல்ஸ் வீடியோ போட்டனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
