கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்..

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3வது நாள் நேற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி நேரம் மற்றும் விவாதம் ஆகியவை நடைபெற்ற நிலையில், இன்று சட்டப்பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது.

அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கரின் கேள்விக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்ததாவது, கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது. தினமும் 40 லட்சம் பெண்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 222 கோடியே 51 லட்சம் முறை பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.