சிக்கமகளூரு மாவட்டத்தின் கித்திலிகொண்டா கிராமத்தில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலுக்கு ஆளாகிய ரத்நாகர் கவுடா (வயது 40) என்பவர் தன்னுடைய மாமியார் ஜோதி (50), மைத்துனி சிந்து (24) மற்றும் 6 வயது மகள் மௌல்யா ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் திங்கட்கிழமை அன்று நடந்தது. மேலும், மற்றொரு குடும்பத்தினர் அவிநாஷ் (38) கால் பகுதியில் துப்பாக்கி காயமடைந்து உயிர் தப்பியுள்ளார்.

தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதுடன், முக்கிய சாட்சியாகவும் உள்ளார். ரத்நாகர் கவுடா, பூர்ணப்ரஜ்ஞா பள்ளியில் முன்னாள் டிரைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொடூரம் பின்னணியில் நீண்டகாலமாக நிலவிய குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டது என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரத்நாகரின் மனைவி தனியாக வாழ்ந்து வந்துள்ளார், இது அவருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.