கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி – வீரியாம்பாளையம் சாலையில், பிறந்த குழந்தையின் உடல் பாகங்கள் சாலையோரத்தில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார், குழந்தையின் உடல் பாகங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பிறந்து சில மணி நேரமே ஆன அந்தக் குழந்தையின் கை, கால்கள் வெட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம், மாரியம்மன் கோயில் அருகில் என்பதால், இந்தக் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது திருமணத்தை மீறிய உறவில் பிறந்ததால் ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் பெற்றோரை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தையின் உடல் பாகங்கள் கிடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
