தாயின் பாசத்திற்கு ஈடுஇணை இல்லை என்பார்கள், ஆனால் அதே தாய் ஆபத்தில் இருக்கும்போது ஒரு குழந்தை காட்டும் வீரமும் துணிச்சலும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் சிப்ளூன் பகுதியில் உள்ள வாஷிஷ்டி ஆற்றங்கரையில் நடந்த ஒரு சம்பவம், இத்தகைய நெஞ்சை உறைய வைக்கும் உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.
வழக்கம்போல தனது தாயுடன் துணி துவைக்கச் சென்ற பத்து வயது சிறுமி ஸ்வர்ணி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கொடூரமான தாக்குதலில் இருந்து தன் தாயை மீட்டெடுத்த விதம் அந்தப் பகுதி முழுவதையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நந்தினி பூபேந்திர பவார் என்ற 35 வயது பெண்மணி, மாலை நேரத்தில் தனது மகள் ஸ்வர்ணியுடன் வாஷிஷ்டி நதியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது, ஆற்று நீரில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த ஒரு ராட்சச முதலையானது திடீரென நந்தினியின் மீது பாய்ந்து, அவரது காலைத் தன் கூர்மையான தாடைகளால் கவ்விப் பிடித்தது.
ஒரு நொடியில் நிலைகுலைந்த அந்தத் தாய் அலறத் தொடங்கினார். முதலை அவரை ஆழமான ஆற்றுப் பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றபோது, மரண பயத்திலும் தன் சுயநினைவை இழக்காத நந்தினி, ஆற்றங்கரையில் இருந்த ஒரு பெரிய பாறையை ஒரு கையால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு தன் உயிரைக் காப்பாற்ற போராடினார்.
தனது தாய் முதலையின் தாடையில் சிக்கி உயிருக்குப் போராடுவதைக் கண்ட சிறுமி ஸ்வர்ணி, பயந்து ஓடாமல் அசாத்திய தைரியத்தை வெளிப்படுத்தினாள். தன் தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில், அந்தச் சிறுமி உடனடியாகப் பாய்ந்து சென்று தாயின் கரங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.
மேலும் தன் சிறிதளவு பலத்தையும் ஒன்று திரட்டி, முதலையின் கொடூரப் பிடியில் இருந்த தாயை கரையை நோக்கி முழு ஆற்றலோடு இழுத்தாள். சிறுமியின் இந்த எதிர்பாராத வீரம் மற்றும் தொடர் போராட்டத்தின் காரணமாக முதலையால் அவர்களை நீருக்குள் இழுக்க முடியாமல் போனது. இறுதியாக, தாயை முதலையின் பிடியில் இருந்து மீட்டு பத்திரமாகக் கரை சேர்த்தாள் அந்தப் பத்து வயது மகள்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த நந்தினி தற்போது காமதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மருத்துவமனையில் நந்தினியைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சிறுமி ஸ்வர்ணியின் ஒப்பற்ற துணிச்சலையும் பாராட்டினர்.
மேலும் மழைக்காலம் என்பதால் வாஷிஷ்டி ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும், மக்கள் ஆற்றங்கரைகளுக்குச் செல்வதையும், துணி துவைப்பது அல்லது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மரணத்தின் விளிம்பிலும் தாய்க்காக ஒரு சிறுமி காட்டிய இந்த வீரம், தாய்மைக்கு மகள் அளித்த மிகச்சிறந்த பரிசாகவும், சமூகத்திற்கு ஒரு சிறந்த சான்றாகவும் பார்க்கப்படுகிறது.
