மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் யோகசுதீஷ் (17), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேரும் கனவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நோக்கத்துடன், அடிப்படை உடற்பயிற்சி உள்ளிட்ட தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் யோகசுதீஷ் பங்கேற்றார். ஆனால், அவரது கையில் பச்சை குத்தியிருந்தது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதனை காரணமாகக் கூறி, அவரை ஆள்சேர்ப்பில் இருந்து நிராகரித்தனர்.

இதனால் மிகுந்த மனவேதனைக்கு ஆளான யோகசுதீஷ், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.