வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலைப்பகுதியில் அமைந்துள்ள செங்காடு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில், அருகிலுள்ள அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகராறு செய்ததால், இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், செங்காடு கிராம மக்களை கத்தி மற்றும் கோடாரி போன்ற ஆபத்தான ஆயுதங்களால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில், பலருக்கு கை, கால் மற்றும் தலை போன்ற இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், வீடுகள் மற்றும் பொதுச் சொத்துகளும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குளறுபடியின் பின்னணியில், தாக்கியவர்களை விடுத்துவிட்டு, பாதிக்கப்பட்ட செங்காடு மக்களையே காவல்துறை கைது செய்ய முயன்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் அதிருப்தியடைந்த மக்கள், காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து, சம்பவ இடத்திலிருந்த போலீசாரை விரட்டி விட்டதோடு, சிலரை சிறிது நேரம் சிறைபிடித்தும் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட போலீசார் விடுவிக்கப்பட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
