தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ம.மணிகண்டன் (24) என்ற இளைஞர் காதல் விவகாரத்தால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிகண்டன், மின் பொருட்கள் பழுது பார்க்கும் தொழிலாளி. அவர், திருச்செந்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்வதற்காக 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருச்செந்தூர் கோயில் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில், நேற்று காலை திருச்செந்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டனை, அந்த சிறுமியின் 16 வயது தம்பி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வழிமறித்து தாக்கினர். அரிவாளால் வெட்ட முயன்ற அவர்களை பார்த்து பயந்த மணிகண்டன் ஓட ஓடி அருகிலிருந்த மரக்கடைக்கு புகலடைந்தார். ஆனால் அந்தக் குழு மரக்கடைக்குள் சென்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீசார், அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். சம்பவத்தையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன், சிறுமியின் தம்பி மற்றும் அவரது நண்பர் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். காதல் விவகாரம் மற்றும் சிறுமி வீட்டை விட்டு சென்ற சம்பவம் காரணமாக முன் விரோதம் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
