தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடந்த சில நாட்களாகவே “ஜனவரியில் நல்ல முடிவு எடுப்போம்” என்று கூறி வந்த நிலையில், தற்போது திமுக-வுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆரம்பத்தில் 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என கெத்தாகக் கேட்ட தேமுதிக-விற்கு, திமுக தரப்பு 8 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாம். டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய கையோடு, கனிமொழி எம்.பி அவர்கள் பிரேமலதாவிடம் போனில் பேசியதுதான் இந்த டீலை ஓகே செய்ய முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

​”யார் எந்தக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை” என்று நேற்று வரை கிண்டலடித்த பிரேமலதா, வரும் 3-ம் தேதி தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் தராத அதிருப்தியில் இருந்த தேமுதிக, இப்போது ஆளுங்கட்சியுடன் கைகோர்க்கத் துணிந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் பிறந்த மண்ணான மதுரையிலேயே இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ‘8+1’ கணக்கு பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.