திமுக கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து, தற்பொழுது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்றும், இனி வரும் காலங்களில் ஆட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேச வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள திமுக முன்னாள் எம்பி அப்துல்லா, மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சு ஆர்எஸ்எஸ் அமைப்பின் குரலைப் பிரதிபலிப்பது போல இருப்பதாகவும், வலுவாக உள்ள திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தவே இது போன்ற கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களால் திமுக அதிருப்தியில் உள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த அதிகாரப் பகிர்வு பேச்சு கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், திருமாவளவன் மற்றும் காதர் மொய்தீன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் சக்திகளை எதிர்த்து ஓரணியில் நிற்பதே தங்களின் நோக்கம் எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பல்வேறு கோஷ்டிகள் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி வருவது, வரப்போகும் தேர்தல் களத்தில் திமுக – காங்கிரஸ் உறவில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற கேள்வியை அரசியல் வட்டாரத்தில் எழுப்பியுள்ளது.
