ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்து வருவது அந்நாட்டு அரசைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஜப்பானில் ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படும் வேளையில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1.32 கோடியாகச் சரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட சுமார் 3.50 லட்சம் குறைவாகும்.

குறிப்பாக, 12 முதல் 14 வயதுடையவர்களுடன் ஒப்பிடும்போது, 0 முதல் 2 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது ஜப்பானின் பிறப்பு விகிதம் எந்தளவுக்குப் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில், மிகக்குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடாகத் தென்கொரியாவிற்கு அடுத்தபடியாக ஜப்பான் உள்ளது.

ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் குழந்தைகளின் சதவீதம் வெறும் 10.8% ஆக மட்டுமே சரிந்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து வருவதும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் ஜப்பானின் எதிர்காலப் பொருளாதாரத்திற்கும், சமூகக் கட்டமைப்புக்கும் ஒரு சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் குழந்தைகளே இல்லாத நாடாக ஜப்பான் மாறி வருகிறதோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.