உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 73 ஆண்டுகளாக உள்ள நிலையில், அதனை நீட்டிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். சுமார் 200 ஆண்டுகள் வரை வாழும் ‘போஹெட்’ வகை திமிங்கலங்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் ரோச்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவற்றின் உடலில் ‘சிஐஆர்பிபி’ எனப்படும் ஒரு அபூர்வ புரதத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த மேஜிக் புரதம் செல்களில் ஏற்படும் டிஎன்ஏ சிதைவைத் தடுத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த புரதம் மனித செல்களையும் சீர் செய்யும் ஆற்றல் கொண்டது என்பது ஆய்வக சோதனையில் உறுதியாகியுள்ளது. இந்த சிஐஆர்பிபி புரதமானது கடும் குளிர்ச்சியான சூழலில் மட்டுமே உடலில் அதிக அளவில் உற்பத்தியாகிறது.
ஆர்க்டிக் கடலின் உறைபனி நீரில் போஹெட் திமிங்கலங்கள் வாழ்வதால், இந்த புரதம் இயற்கையாகவே அவற்றின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாகிறது. தற்போது மனிதர்களிடமும் இந்த புரதத்தின் அளவை அதிகரிக்க குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இருப்பினும், இது இன்னும் ஆரம்பக்கட்ட ஆய்விலேயே இருப்பதால், அதிகாரப்பூர்வமான முடிவுகளுக்குப் பொறுத்திருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
