உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில், வசதிகள் ஏதுமற்ற மிகச்சிறிய ஒற்றை அறைக்கு ஒரு மாத வாடகையாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடகப் பிரபலம் காலேப் சிம்ப்சன், நியூயார்க் நகரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வாடகை குறித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நியூயார்க்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசிக்கும் 44 சதுர அடி கொண்ட ஒற்றை அறை வீடு காட்டப்பட்டுள்ளது.
அந்த அறை எவ்வளவு சிறியது என்றால், ஒருவர் அதன் நடுவில் நின்று கைகளை நீட்டினால் இருபுறமும் உள்ள சுவர்களைத் தொட்டுவிட முடியும். சமையலறை வசதியோ, தனிக் குளியலறையோ அந்த அறைக்குள் இல்லை.
இந்தச் சிறிய இடத்திலும் அந்தப் பெண் தனது புத்திசாலித்தனத்தால் அறையை அலங்கரித்துள்ளார். சுவர்களில் வண்ணமயமான சுவரொட்டிகள், ஆடைகள் மற்றும் கைக்காப்புகளைத் தொங்கவிட்டுள்ளார். உறங்குவதற்காக அறையின் மேல்பகுதியில் ஒரு சிறிய மரப்பலகை போன்ற அமைப்பை ஏற்படுத்தி, ஏணி மூலம் ஏறிச் சென்று உறங்குகிறார்.
View this post on Instagram
மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், இந்த வீட்டிற்குத் தனிக் குளியலறை கிடையாது. நடைபாதையில் உள்ள பொதுவான குளியலறையை அந்தப் பெண் மேலும் 5 பேருடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இது வீடு அல்ல, ஒரு துணி வைக்கும் அலமாரி அல்லது சிறை அறை போல உள்ளது,” என ஒரு பயனர் விமர்சித்துள்ளார். இவ்வளவு அதிக வாடகைக்கு வேறு இடங்களில் ஒரு பெரிய மாளிகையையே வாடகைக்கு எடுக்கலாம் எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பெருநகரங்களில் வாழ்வதற்கு மக்கள் எந்த அளவு சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி எனப் பலரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆடம்பர நகரங்களில் வாழ்வதற்கு மக்கள் கொடுக்கும் விலை எவ்வளவு அதிகம் என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
