தென்கொரியாவில் கடந்த சில வாரங்களாக மக்கள் குப்பை கொட்டும் பைகளை (Garbage Bags) போட்டி போட்டுக்கொண்டு அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் கடைகளில் குப்பைப்பைகள் காலியாகி, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணம் உள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக வரும் கச்சா எண்ணெய் மற்றும் அதன் துணைப் பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான மிக முக்கியமான மூலப்பொருள் ‘நாப்தா’ ஆகும். தென்கொரியா தனது தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நாப்தாவை இந்த கடல் வழியாகவே இறக்குமதி செய்கிறது. போர் சூழலால் இதன் வரத்து தடைபடும் என்ற பயம் மக்களிடையே பரவியுள்ளது.

நாப்தா தட்டுப்பாட்டால் குப்பைப்பைகளின் உற்பத்தி குறையும், அதன் விலை பல மடங்கு உயரும் அல்லது கடைகளில் கிடைக்காமல் போகும் என்ற வதந்திகள் பரவின.

இதனால் மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட பல மடங்கு பைகளை இப்போதே வாங்கி பதுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த சில நாட்களில் மட்டும் குப்பைப்பைகளின் விற்பனை வழக்கத்தை விட 300% முதல் 500% வரை அதிகரித்துள்ளது.

 தட்டுப்பாட்டைத் தவிர்க்க, ஒரு நபருக்கு இத்தனை பைகள் தான் என்று கடைகளிலும், அரசு தரப்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தென்கொரிய அரசு, “அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்குத் தேவையான குப்பைப்பைகள் கையிருப்பில் உள்ளன, மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.