மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் மேலும் கருக்கட்டியுள்ளன. ஈரானின் சக்திவாய்ந்த ராணுவப் பிரிவான புரட்சிகர காவல் படையின் (IRGC) உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இத்தகவலை ஈரான் ராணுவம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 6) அதிகாலை அமெரிக்க – இஸ்ரேல் படைகள் சரமாரியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தின. குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், மேஜர் ஜெனரல் மஜித் காதேமி உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் முகமது காசெமிக்கு பதிலாக, உளவுத்துறை தலைவராக காதேமி பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 4 சிறுமிகள், 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் புரட்சிகர காவல் படை தனது டெலிகிராம் பக்கத்தில், “அமெரிக்க – இஸ்ரேல் எதிரிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் மஜித் காதேமி தியாகி ஆகிவிட்டார்” என்று பதிவிட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தற்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில், “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி” என்று மட்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அவர் ஈரானுக்கு விதித்துள்ள இறுதி காலக்கெடுவாகும். ஏற்கனவே, “ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால் ஈரானுக்கு நரகத்தைக் காட்டுவோம்” என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதற்குப் பதிலடியாக, “அமெரிக்காவுக்கும் நரகத்தைக் காட்டுவோம்” என ஈரானும் சவால் விடுத்துள்ளது.

மேலும் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதி கொல்லப்பட்டிருப்பதும், ட்ரம்ப்பின் காலக்கெடு முடிவுக்கு வருவதும் மேற்கு ஆசியாவில் எந்நேரமும் ஒரு முழு அளவிலான உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், உலகப் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது.