கடந்த 2020–21-ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட ஆறாவது கட்ட தங்க பத்திரங்கள், தற்போது முதிர்வு காலத்தை அடையுமுன் திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்கூட்டியே பணம் பெற்றுக்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.10,610 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே, பத்திரங்கள் வெளியான செப்டம்பர் 8, 2020 அன்று இருந்த விலையான ரூ.5,117-ஐ எடுத்தால், இது 107.35 சதவீதம் அதிகரிப்பு ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில்: தங்கத்தை நேரடியாக வாங்காமல், ஆவண வடிவில் முதலீடு செய்யலாம். ஒரு கிராம் தங்கம் = ஒரு யூனிட் என்ற கணக்கில் பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். ஆனால், 5 ஆண்டுகள் கடந்த பிறகு, முன்கூட்டியே திரும்பப்பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்ட 6வது கட்ட தங்க பத்திரங்கள், 2028ல் முதிர்வு அடையவுள்ளன. இவை, விதிமுறைகளின்படி, 5 ஆண்டுகள் பூர்த்தியாகும் நாளான செப்டம்பர் 8, 2025 முதல் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் மிலாதி நபி பண்டிகை காரணமாக செப்டம்பர் 8ம் தேதி விடுமுறை என்பதால், ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 7ம் தேதி முதலே பத்திரங்களை திரும்பப் பெற அனுமதித்துள்ளது.
விலை நிர்ணயம் எப்படி?
பத்திரம் வெளியிடப்பட்ட நாள்: 08.09.2020
அன்றைய தங்க விலை: ₹5,117 (ஒரு கிராம்)
தற்போதைய திரும்பப்பெறும் மதிப்பு: ₹10,610 (யூனிட் ஒன்றுக்கு)
விலை உயர்வு: ₹5,493
சதவீத உயர்வு: 107.35%
இந்த விலை, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் தங்கத்தின் நிஜ மதிப்பை விடவும், நிலையான வட்டியுடன் கூடிய பத்திரங்கள் எனும் வகையில், இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை தரும் பாதுகாப்பான வாய்ப்பாக விளங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, மூலதனத்தை 2 மடங்கு அதிகமாகவே பெற முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
