தமிழ் திரையுலகில் 85 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இயங்கி வந்த பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன், அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கே. ராஜன் தனது காரில் ஓட்டுநருடன் புறப்பட்டுள்ளார். கார் அடையாறு ஆற்றங்கரை அருகே மேம்பாலத்தில் வந்தபோது, சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதாகக் கூறி காரை நிறுத்தச் சொல்லியுள்ளார். காரில் இருந்து இறங்கிச் சென்றவர், எதிர்பாராதவிதமாக திடீரென பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் ஓட்டுநரும் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் தேடுதல் வேட்டை நடத்தி, கே. ராஜனை சடலமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தயாரிப்பாளர் கே. ராஜனுக்கு சுமார் 15 கோடி ரூபாய் வரை கடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடன் சுமை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால், கடந்த சில மாதங்களாக அவர் தனது குடும்பத்தினருடன் பெரிதாக தொடர்பில்லாமல், தனியாக ஹோட்டல் ஒன்றில் தங்கி வசித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக அவர் எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்காமல் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. கடைசியாக அவருடன் பயணித்த கார் ஓட்டுநரிடம், ராஜன் ஏதேனும் மனவருத்தத்துடன் பேசினாரா என்பது குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இன்று பிரேத பரிசோதனை முடிவடைந்த பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்பட்டவர். 85 வயதான நிலையிலும், திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது மேடைகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள் குறித்து எந்தவித ஒளிவுமறைவும் இன்றி, அதிரடியாகப் பேசக்கூடியவர். முக்கியமாக, தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டங்கள், முன்னணி நடிகர்களின் அநியாயமான சம்பள உயர்வு மற்றும் திரையுலகில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சமரசமின்றி குரல் கொடுத்து வந்தவர்.
துணிச்சலாகப் பேசி வந்த ஒரு மூத்த கலைஞர், கடன் பிரச்சினை காரணமாக இத்தகைய விபரீத முடிவை தேடிக்கொண்டது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
