தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை தொடர்பாக பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (18) என்ற இளைஞர், பக்கத்து ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு கோவில்பட்டி கூடுதல் (புதிய) பேருந்து நிலையம் அருகே சஞ்சய் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்குழுவினர் சஞ்சயை ஆயுதங்களுடன் தாக்க முயன்றனர்.
அவர்களிடமிருந்து தப்பிக்க சஞ்சய் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளார். எனினும், விடாமல் துரத்திச் சென்ற அந்த கும்பல், அவரை ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த சஞ்சய், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி காவல்துறையினர், சஞ்சயின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சஞ்சய் காதலித்த பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் இணைந்து இக்கொலைச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் தலைமறைவாக இருந்த குமார் உட்பட மூன்று பேரையும் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து, கொலைக்கான பின்னணி குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
